பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக முன்னதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து பல நாடுகளுக்கு பயணிக்கும் சர்வதேச விமானங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.
பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கும் விமானங்கள் தடை செய்யப்பட்ட நிலையில் விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி தடுப்புமருந்து நிறுவனமான பயான்டெக் நிறுவனம் ஓர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் வகைக்கு இன்னும் ஆறு வாரங்களுக்குள் புதிய தடுப்பு மருந்தை தங்களால் கண்டுபிடித்துவிட முடியும் என்று உறுதிபட தெரிவித்துள்ளது பயான் டெக்.
உருமாற்றம் பெற்ற கொரோனாவைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் தற்போது தாங்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தடுப்பு மருந்துகள்கூட சில சமயங்களில் இந்த வகை கொரோனா வைரஸை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இது பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாட்டு குடிமக்களை சற்று ஆறுதல் படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.