திங்களன்று அவசரமாகக் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் திடீரென, அவசர அவசரமாக 11ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு நீதிமன்றில் பதிலளிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் முன்நகர்த்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் செயலர்களுக்கும் இடையில் கடந்த 2ஆம் திகதி சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதன்போது மார்ச் 17ஆம், 18ஆம், 19ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட வேட்புமனுத் தாக்கல்கள் தொடர்பில் சிக்கல் நிலைமை எழுந்திருந்தது. மூன்று தினங்களும் அரசால் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததால் சிக்கல் தோன்றியிருந்தது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியிருந்த நிலையில், சட்டத்துக்கு அமைவாகச் செயற்படுமாறு அவர் பதிலளித்திருந்தார்.

ஜூன் 20ஆம் திகதி தேர்தல் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானிக்கு எதிராகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படலாம் என்ற நிலைமை காணப்படுவதால், திங்கட்கிழமை அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி ஆராயவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir