எவ்வித சம்பந்தமும் இல்லாமல் புலிப் பல்லவி பாடிவருகின்றது அரசு!!

கொரோனா விவகாரத்திலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அரசு புலிப் பல்லவி பாடிவருகின்றது. புலிகளுக்கு எதிரான போரும், கொரோனா ஒழிப்புச் சமரும் இருவேறுபட்ட விடயங்கள் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும். என சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.

“பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன. எதிரணிகளின் இந்தச் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், சுனாமி அனர்த்தத்தின்போது விடுதலைப்புலிகள் மனித நேய அடிப்படையில் செயற்பட்டனர்.

அவர்களிடம் இருந்த அந்த பண்புகூட எதிரணி உறுப்பினர்களிடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் காலத்தில் நிலவிய போர் போல கொரோனா விவகாரத்தை பார்க்க முடியாது. கொரோனா வைரஸ் பரவினால் நோயாளிகளை குணப்படுத்தி மருத்துவ ரீதியிலான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு எமது நாட்டில் சிறந்த மருத்துவர்களும், சுகாதார துறையினரும் இருக்கின்றனர்.

எனவே, அவர்களிடமிருந்துதான் அரசு ஆலோசனை பெறவேண்டும். மாறாக எம்மிடம் இருந்து அல்ல.

எனினும், மக்களுக்கு உரிய வகையில் நிவாரணங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவா, கொடுப்பனவுகள் உரிய வகையில் வழங்கப்படுகின்றனவா போன்ற நிதிசார் விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.

இவை குறித்து கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்றமே சிறந்த இடமாகும். இதன்காரணமாகவே சபையைக் கூட்டுமாறு வலியுறுத்தினோம்.

அலரி மாளிகைக் கூட்டத்துக்கு சென்றிருந்தால் அங்கு பிரதமர் எத்தகைய கருத்தையும் வெளியிடக்கூடும். அவற்றை அதிகாரபூர்வ அறிவிப்பாக கருத முடியாது. சிலவேளை போலியான தரவுகளைக்கூட வெளியிடமுடியும். அத்தகைய சந்திப்பில் பங்கேற்பது பயனுடையதாக அமையாது.

ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறு செயற்படமுடியாது. அறிவிப்பொன்று விடுக்கப்பட்டால் அது ஹன்சாட்டில் வெளிவரும். அதில் சட்டபூர்வமான தன்மை இருக்கின்றது.

இதற்காகவே இவ்விவகாரங்களை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடி தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயாரானோம். இதற்கு அரசு உடன்பட மறுக்கின்றது.

அதேபோல் விடுதலைப்புலிகளின் பிரச்சினையும், கொரோனா வைரஸ் தொற்றும் ஒன்றல்ல. எனவே, எதையாவது கூறி தப்பிக்க முயற்சிக்கும் கைங்கரியத்தை அரசு கைவிடவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார் .

You May Also Like

About the Author: kalaikkathir