குருந்தூர்மலையைப் பெளத்தமயமாக்கும் முயற்சியை உடனடியாக கைவிடுங்கள்- செல்வராசா கஜேந்திரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது தாயகத்தில் மிக மோசமான ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இதனால் தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப்போயுள்ளதுடன் அவர்களின் நிம்மதியும் கெட்டுப்போயுள்ளது.

இந்த நிலைமையில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அவசரமாகக் காணப்பட வேண்டும்.

குருந்தூர் மலையில் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு இராணுவத்தின் 51ஆம் படையணியின் கொடிகள் பறக்கவிடப்பட்டன எனவும், அதன் பின்னர் அங்கு தொல்லியல் ஆய்வுகள் இடம்பெறுகின்றன எனவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அங்கு ஒரு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலம் தமிழர்களுக்கானதே. இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தமிழர்கள் வழிபாடுகளில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை என்ற நீதிமன்றக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு தற்போது பெளத்த ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது.

எவ்வாறாயினும் எல்லை மீள் நிர்ணயம் செய்து இந்தப் பகுதியை பெளத்த மயமாக்க எடுக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir