இலங்கையில் கொரோனா வைரஸை அடையாளம் காணுவதற்காக நோயாளிகளை பரிசோதிக்கும் PCR பரிசோதனை தொடர்பில் தவறான அறிக்கை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஆயிரக்கணக்கானோரின் மாதிரிகளை மீண்டும் பரிசோதிக்க நேரிட்டுள்ளதாக, சுகாதார நிபுணர்களின் நிபுணத்துவ குழுவின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
11 அரச ஆய்வுகூடங்கள் உள்ளன. அவற்றில் நாள் ஒன்றுக்கு 2000 PCRபரிசோதனைகள் மேற்கொள்ள கூடிய வசதிகள் இருந்தாலும் அவசியமான பரிந்துரைகள் அவற்றிற்கு கிடைப்பதில்லை.
அரச ஆய்வுகூடம் உள்ள போதிலும் வேறு இடத்தில் பரிசோதனைக்காக பரிந்துரை வழங்குவதினால் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுவதாக தமது அமைப்பு பல முறை சுட்டிக்காட்டியது. ஜனாதிபதி உட்பட இது தொடர்பில் 8 முறை கடிதம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.
எப்படியிருப்பினும் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கடிதங்கள் இடையில் வேறு நபர்களின் கைகளுக்கு செல்கின்றதா என்ற சந்தேகம் தமது அமைப்பிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து அரசியல் தேவைக்காக செயற்படுகின்றவர்கள் உள்ளார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நிலைமை தொடர்பில் தன்னிடம் உள்ள இரகசிய அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறேன்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொற்றுக்குள்ளாகாதவர்கள் தொடர்பில் தவறாக பல்வேறு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.