நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா – கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற கனரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இராவணாகொடை கலப்பிட்டியவில் வசிக்கும் சந்தருவன் ரணசிங்க (வயது – 19) மற்றும் என்.ஜீ.தினேஷ் (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது,

ஐந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த சுற்றி திரிந்த குழுவில் ஒரு சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் கனரக லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir