மியான்மர் நாட்டில் தற்போது அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆங் சங் சூ காய் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக ஆதரவாளர்களது போராட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. யாங்கன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பேரணிகள் நடைபெற்று வருவதால் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
மியான்மரில் நடக்கும் போராட்டம் உலக அளவில் இணையத்தில் பிரபலமாகக் கூடாது என நினைத்த அந்நாட்டு ராணுவம் தற்காலிகமாக இணைய சேவையை நிறுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு எழவே இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது.
சிறுபான்மையினர் வாழும் மாகாணங்களில் போராட்டம் அதிகமாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் உதவியுடன் மியான்மர் இராணுவத்தினர் அவசர நிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு குடிமக்களின் உரிமையை பறித்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்று மியான்மரில் உள்ள சீனா மற்றும் அமெரிக்க தூதரகத்தின் வாசலில் முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் சீனாவின் அடக்குமுறையை தடுத்து மியான்மர் ராணுவத்தை கட்டுப் படுத்த அமெரிக்கா உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.மியான்மரில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
மியான்மரில் உள்ள ஜனநாயக ஆதரவாளர்களுக்கு அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மியான்மர் ராணுவத்துக்கு உதவும் வகையில் தொழில் செய்யும் குடிமக்கள் அந்த தொழிலை கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஜூன் டா எனப்படும் மியான்மர் ராணுவ அமைப்புக்கு எதிராக தற்போது அந்நாட்டு அரசாங்க ஊழியர்களும் போர்க்கொடி தூக்க துவங்கிவிட்டனர்.
ஆங் சங் சூ காய் அரசுமீது ராணுவத்தினர் ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி தொடர்ந்து ஆங் சங் சூ காய் மன்னராட்சி போல மியான்மரை ஆள முயற்சிப்பதாகவும் நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்றும் அவர்கள் முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடதக்கது.