எச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் தேவைக்கும் அதிகமாகவே குவிந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான எச்1பி விசா, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. வேலை தொடர்பாக அமெரிக்கா வருபவர்களுக்கு ஆண்டுக்கு 65 ஆயிரம் எச்1பி விசாக்களும், மாணவர்களுக்கான விசாக்கள் 20 ஆயிரமும் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிதி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கடந்த வாரம் வரவேற்கப்பட்டன. இந்நிலையில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எச்1பி விசா விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாக அமெரிக்க குடியுரிமை சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
விசாவுக்கு தேர்வு செய்யப்படாதவர்களுக்கு இணையம் வாயிலாகத் தகவல் அனுப்பப்படும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.