செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம்

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 30ம்  திகதி அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர்.

இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக தற்போது செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.

சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறக்கினர். இதன் பின்னர் முதல் புகைப்படத்தை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது.

நாசாவின் விடாமுயற்சியாக அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

செவ்வாயில் ரோபோட்டிக் ரோவர் தரையிறங்கியதை கண்காணித்த நாசா விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘நான் செவ்வாய் கிரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்’ என்று நாசாவின் மார்ஸ் ரோவரின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

நாசாவின் முயற்சியை பல்வேறு நாடுகளின் தலைவர்களும், விஞ்ஞானிகளும் பாராட்டி உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir