வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றார்.
தன்னை யாரும் முகக்கவசத்துடன் சந்திப்பதை விரும்பவில்லை என்பதால், முகக்கவசம் அணிவதை தவிர்த்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரோஸ் கார்டனில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், முகக்கவசம் அணியாமலே ஊடகவியலாளர்களைச் சந்தித்த ட்ரம்ப் கூறுகையில்,
“நான் அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பதால் முகக்கவசம் அணிய தேவையில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகைக்கு வருகிறார்கள், செல்கிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்த நாம் சிறப்பாகவே செயற்படுகிறோம். ஒருவருக்குதான் கொரோனா வைரஸ். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கெல்லாம் நேர்மறையான முடிவுகள் தான் வந்துள்ளன.
நான் பல்வேறு தரப்பினரை வெள்ளை மாளிகையில் சந்திப்பேன். பல்வேறு நாட்டு ஜனாதிபதிகளை சந்திப்பேன். அப்போது என்னை யாரும் முகக்கவசத்துடன் சந்திப்பதை விரும்பவில்லை” என கூறினார்.
வெள்ளை மாளிகை ஊழியர்கள் இருக்கையில் அமரும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.