பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விவாதிப்பதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு க.சுகாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
குறித்த அழைப்புக்கு 24 மணித்தியாலங்கள் கடந்தும் எந்தவொரு பதிலும் வராத நிலையிலேயே க.சுகாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய ஆயுதப் போராட்டமும், அதன் வளிமுறையும் பிழையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு நேற்றைய தினம் எங்களுடைய கண்டனத்தை தெரிவித்து அவருக்கு அத்தகைய கருத்தை தெரிவிப்பதற்கு அருகதையோ, தகுதியோ கிடையாது என்ற விடையத்தையும் தெரிவித்திருந்தோம்.
அது மாத்திரமில்லாமல் நான் திரு.சுமந்திரன் அவர்களுக்கு பகிரங்கமாக ஒரு சவாலையும் விடுத்திருந்தேன்.
திரு.சுமந்திரன் அவர்களுக்கு முதுகெலும்பிருந்தால் தேசியத் தலைவருடைய ஆயுதப் போராட்டம் சரியா? தவறா? பகிரங்கமாக பொதுத்தளத்திலே ஒரு பகிரங்க விவாதத்திக்கு நான் தயாராக இருக்கின்றேன் முடிந்தால் வாருங்கள் கருத்துக்களால் மோதி பார்ப்போம் என்று தெரிவித்திருந்தேன்.
24 மணித்தியாலங்கள் கடக்கின்றது இதுவரை அவரிடமிருந்து எத்தகைய பதில்களும் வரவில்லை. நான் அதிலே சொல்லியிருந்தேன் முதுகெலும்பு இருந்தால் வாருங்கள் என்று, சிலநேரத்தில் அதனால்தான் அவர் வரவில்லையோ தெரியவில்லை.
ஆனால் நாம் ஒரு விடையத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது திரு.சுமந்திரன் அவர்களுடைய அண்மைக்கால கருத்தோ அல்லது இன்றைய கருத்தோ கிடையாது. அவருடைய நிகழ்ச்சி நிரலே இதுதான் என க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.