கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

திருகோணமலை- நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம்  வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர், யாழ்ப்பாணம்- வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த சிவச்சந்திர ராசா சிந்துஜன் (21 வயது) என குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 7பேர் கொண்ட குழுவினர், அங்கு ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு, மீண்டும் யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காக சென்றபோதே நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் ஒருவரின் சடலம் அன்றைய தினமே கண்டெடுக்கப்பட்ட நிலையில் மற்றைய இளைஞரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவரது சடலம் நேற்று மாலை கரையொதுங்கியது.

அதனைத் தொடர்ந்து சடலத்தை, சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க குச்சவெளி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக குச்சவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir