கொவிட் 19 நோய்க்கு எதிரான அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் ஒக்ஸ்ட்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய, சுவீடனிய கூட்டு நிறுவனமான அஸ்ட்ராஸெனிக்கா நிறுவனம் ஆகியன இணைந்து இத்தடுப்பூசியை தயாரித்தன.
ஐரோப்பாவில் இத்தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 40 பேருக்கு குருதி உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டதால் பல நாடுகள் அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடுகளான ஜேர்மனி. பிரான்ஸ், ஸ்பெய்ன், இத்தாலி உட்பட பல நாடுகள் இத்தடுப்பூசி பாவனையை இடைநிறுத்தியுள்ளன.
உலகில் 1.1 கோடிக்கும் அதிகமானோருக்கு இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசிக்கும் குருதி உறைவுக்குமான தொடர்புக்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதுடன், இத்தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டாம் என நாடுகளிடம் கோரியுள்ளது. இந்நிலையில், அஸ்ட்ராஸெனிக்கா தடுப்பூசி பாதுகாப்பானது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரிட்டனின் டைம் பத்திரிகையின் நேற்றைய பதிப்பில் எழுதியுள்ளார்.
‘இத்தடுப்பூசி மிகவும் சிறப்பாக செயற்படுகிறது.. இந்தியா முதல் அமெரிக்கா வரை பல இடங்களில் இத்தடுப்புமருந்து தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குபடுத்துநர் முகவரகமானது, உலகின் மிகக் கடினமான மற்றும் மிகவும் அனுபவம் மிக்க ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களில் ஒன்றாகும் எனவும் செய்தியாளர்களுடன் திங்கட்கிழமை பேசுகையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறினார்.