இன்றும் நாளையும் தாதியர்கள் வேலைநிறுத்தம்

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தாதிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், கொரோனா வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் என்பனவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அகில இலங்கை தாதியர் சங்கம் இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், சாதகமான முடிவுகள் கிடைக்காமை காரணமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தாதியர் சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடக குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir