மாடலிங் துறையை சேர்ந்தவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில சினிமாக்களில் துணை நடிகையாக தலை காட்டியுள்ளார்.
அதன்பிறகு மாடலிங் துறையிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்புக்கிழுத்து மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் குறித்தும், அவர்களுடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவரது ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பேசி வெளியிட்டிருந்த வீடியோவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவதூறாக பேசியிருந்தார்.
அதில் பட்டியலின மக்கள் தான் மோசமானவர்கள் என்றும், அவர்கள் தான் குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்றும் பேசிய வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. இதுதொடர்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசிக வன்னியரசு அளித்த புகாரின்பேரில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என்னைத் தாராளமாகக் கைது செய்து கொள்ளுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னைக் கைது செய்வது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும்.
பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை. எனக்குத் தொந்தரவு கொடுத்தவர்களை மட்டுமே தவறானவர்கள் என்று கூறினேன்என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கேரளா மாநிலம், ஆழப்புழாவில் உள்ள சுப்ரீம் ரிசார்ட்டில் பதுங்கியிருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கருணாகரன் தலைமையிலான போலீசார் கேரளாவுக்கு விரைந்து சென்று, ரிசார்ட்டில் இருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவருடைய வீடியோ கலாட்டா, கைது செய்யும் போதும் தொடர்ந்தது. வீரம் வசனம் பேசிய மீரா மிதுன் போலீசை பார்த்ததும் என்னை செய்வது என தெரியாமல், ‘என்னைத் தொட்டால் என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வேன்’ என்று மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார்.
கைது செய்யப்பட்ட மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சாலை மார்க்கமாக இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்து.
வேப்பேரியில் உள்ள சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, பட்டியல் இன மக்களுக்கு எதிரான மோதலை தூண்டும் வகையில் பேசியது ஏன்?, தொடர்ந்து வீடியோ வெளியிட அவருக்கு பக்கபலமாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார்? என்று துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
முன்னதாக கமிஷனர் அலுவலகத்தில் வேனில் அழைத்து வந்தபோது, போலீசாருக்கு எதிராக கூச்சலிட்டப்படியே சென்றார்.