நீண்டநாள் கோரிக்கையான திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாவதால், பின்னலாடை துறையினர், ஆடிட்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோரிக்கை நிறைவேற ‘தினமலர்’ நாளிதழ் பக்கபலமாக இருந்ததாக வரி பயிற்சி யாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2019ல், தமிழகம் முழுவதும் வணிக வரி கோட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. கோவை கோட்டத்தில் அங்கம் வகித்த திருப்பூர் வணிக வரி மாவட்டம், ஈரோடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டது.
திருப்பூர் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம், காங்கயம் பகுதிகள், கரூர் மாவட்டத்துடனும்; அவிநாசி, கோவையுடனும்; உடுமலை சரகம், பொள்ளாச்சி வணிக வரி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.இதனால், திருப்பூர் மாவட்ட பின்னலாடை துறையினர் உட்பட பல்வேறு துறை சார்ந்த வர்த்தகர்கள், ஆடிட்டர்கள், வரி சார்ந்த முறையீடுகளுக்கு உயர் அதிகாரிகளை சந்திக்க, கோவை, ஈரோடு, கரூர் என வெவ்வேறு மாவட்டங்களுக்கு அலையவேண்டியுள்ளது.திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என, பின்னலாடை துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
சட்டசபையில் நேற்று நடந்த, வணிக வரித்துறைக்கான மானியக்கோரிக்கையின்போது, அமைச்சர் மூர்த்தி, ‘வணிக வரித்துறையை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், திருவாரூர், ஓசூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் புதிய வணிக வரி நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும். இந்த துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், செங்கல்பட்டு, கடலுார், திருவாரூர், ஓசூர், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆறு நுண்ணறிவு கோட்டங்கள் (அமலாக்க பிரிவு) உருவாக்கப்படும்’ என அறிவித்துள்ளார்.