இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதம் :
நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சோ்ந்த 66 மீனவக் கிராமங்களிலிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. அதில் 23 தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, அவா்கள் பயன்படுத்திய 2 படகுகளையும் பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவா்களை உடனடியாக விடுவிக்க உதவுமாறு மீனவ சமூகத்தினா் என்னிடம் கோரிக்கை விடுக்கின்றனர். அதை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சரான உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவா்களையும், அவா்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்று அந்தக் கடிதத்தில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளாா்.