நாள்தோறும் ‘கொரோனா’ பாதிப்பு உயர்வு நேற்று 55 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 25 பேர் கடற்படையினர், 03 பேர் மாலைதீவிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 08 பேர் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 19 பேர் கட்டாரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று குவைத்திலிருந்து வந்ததாக அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இராணுவச் சிப்பாய் எனச் சரிப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ஆரம்ப கட்ட ஆவணப்படுத்தலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உறுதிப்படுத்தலை அடுத்து இது அறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

குறித்த இராணுவச் சிப்பாய், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகை தரும் பகுதியில் கடமையில் ஈடுபட்ட நிலையில், குவைத்திலிருந்து வந்த குழுவுடன் நெருக்கமாகத் தொடர்புற்று பணிகளில் ஈடுபட்டவர் எனவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 1,613 பேரில் தற்போது 822 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 781 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்று சந்தேகத்தில் மேலும் 55 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir