கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் நாடு முழுவதும் 3900க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவாயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி இறுதி ஒன்பது வாரங்களில் 3900 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் கடுமையான சூழ்நிலை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரவிந்து மீகாஸ்முல்ல கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், Phishing, தனியுரிமை மீறல்கள், மோசடிகள், சமூக ஊடகம் தொடர்பான சம்பவங்கள் மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினை குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர் என்பது புலப்படுகின்றது எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் தொழில்நுட்ப உதவியை வழங்கியுள்ளோம்.
COVID-19 காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இணைய குற்ற சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த நேரத்தில் கூடுதல் விழிப்புடன் இருப்பது பொதுமக்களின் கடமையாகும் ”என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியாளர் ரவிந்து மீகாஸ்முல்ல மேலும் கூறியுள்ளார்