எதிர்காலத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாத்திரம் தங்கியிருக்க விரும்பாத காரணத்தினால், ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் நவின் திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அந்த மறுசீரமைப்பு, அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார். இம்முறை மே தினத்தை தங்களது கட்சி சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சமகி ஜன பலவேகய (SJB) எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்த திஸாநாயக்க, SJB எம்.பி.க்கள் தாங்களாகவே அப்படியான முடிவினை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
SJB நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனசாட்சிக்கு இணங்க நடப்பார்கள் என்றும், அவர்கள் எங்களுடன் இணைவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்களில் பெரும்பாலோர் SJB க்கு எதிர்காலம் இல்லை என்பதையும், ஜாதிக ஜன பலவேகய பலமாகிவிட்டது என்பதையும் உணர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளதோடு வட்டி வீதங்கள் மே மாதத்திற்குள் குறைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பணவீக்கம் ஆண்டு இறுதிக்குள் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில், SJB யிலுள்ளவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டால் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை SJB உறுப்பினர்களில் பெரும்பாலானோர் உணர்ந்துள்ளனர் என்றும் நவின் திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.