பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை!

இலங்கையின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இராஜதந்திரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர அணிகளுக்கு இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்கும் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், பொருளாதார மீட்சிக்காக இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் விளக்கினார். சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் ஊக்குவிக்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், நாடுகளின் பயண ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

2022 டிசெம்பர் மற்றும் 2023 ஜனவரியில் ஜனாதிபதியால் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியமை மற்றும் ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை நியமித்தமை உள்ளிட்ட நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இதேவேளை 13 ஆவது திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை அமைப்பதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்த அண்மைய தகவல்களையும் அவர் வழங்கினார். மேலும், நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TRC) ஆய்வு செய்வதற்காக சந்திப்புகளை எளிதாக்கியதற்காக தென்னாபிரிக்க அரசாங்கத்திற்கு நன்றி கூறுவதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir