இலங்கையில் கைத்தொழில்களுக்கு பாதுகாப்பு கொள்கையொன்று தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பு கொள்கையை பின்பற்றுவது அவசியமானது. இல்லையெனில் உள்ளூர் கைத்தொழில்களை பேணுவது பெரும் பிரச்சினையாக மாறி நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இல்லையேல் உள்ளூர் கைத்தொழில் வீழ்ச்சியை தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற 9 கைத்தொழில் ஆலோசனை சபைகளுக்கு நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் ரமேஸ் பத்திரன இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
தொழிற்துறை அமைச்சின் கீழ் பல்வேறு தொழில் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 துறைசார் ஆலோசனைக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதற்கு முன்னர் 11 துறைசார் ஆலோசனைக் குழுக்களுக்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
ஆடைகள், மருந்துப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் பூச்சுகள், வர்ணங்கள் மற்றும் இரசாயனங்கள், படகுப் பொருட்கள், பால் மற்றும் பால் தொடர்பான பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், இறப்பர் பிளாஸ்டிக் மற்றும் கனிமப் பொருட்கள் தொடர்பான துறைசார் ஆலோசனைச் சபைகளுக்கு நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இந்த நிகழ்வில் கையளிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட கைத்தொழில் துறைகளின் அபிவிருத்திக்காக துறைசார் ஆலோசனைச் சபைகள் தேவையான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளைத் தயாரிக்கும் என்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன நிகழ்வில் குறிப்பிட்டார்.
T02
