பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் ( FUTA ) தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏப்ரல் 17ஆம் திகதி முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய வரித் திருத்தம், மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் மக்களால் விரும்பத்தகாத அரசாங்கத்தின் பல முடிவுகளுக்கு எதிராகக் கடந்த மார்ச் 15 அன்று தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டின் தலைமையில் நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் FUTA இணைந்தது.

மறுநாள் டோக்கன் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து சேவைகள் வழமைக்குத் திரும்பிய போதிலும், தமது கோரிக்கைகளுக்குத் திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படாததால், FUTA தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடரத் தீர்மானித்திருந்தது.

இதன் விளைவாக, 2022 G.C.E உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 50 நாட்கள் வரையில் தாமதமாயின. இதனால், மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துக் கவலை தெரிவித்தனர்.

இதன் பின்னணியில், A/L பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் செயன்முறை தொடர்பாக முடிவு செய்வதற்காக  FUTA நேற்று இரவு ஒரு விசேட கூட்டத்தைக் கூட்டியது.

இதேவேளை, வரும் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மேலும் இரண்டு வாரங்களுக்கு (மே 29) பிற்போடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் திங்கட்கிழமை அறிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir