இலங்கை – இந்திய கப்பல் சேவைக்கான முயற்சிகளில் கடற்படையினரும் இணைவு!

இலங்கைக் கடற்படையின் செய்திக்குறிப்பின்படி, இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இலங்கைக் கடற்படையும் இணைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த திட்டத்தில் கடற்படை இணைவதன் மூலம் இது அதிக போக்குவரத்துக்கு இடமளிப்பதுடன் சிறந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பையும் வழங்குமென நம்பப்படுகின்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கு அமைவாக, துறைமுக அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைக் கடற்படையானது காங்கேசன்துறைத் துறைமுக வசதிகளை அதன் மனிதவளம் மற்றும் நிபுணத்துவத்தை இயலுமைப்படுத்துவதன் மூலம் விஸ்தரிப்பதற்கு ஆதரவளிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. கடற்படையின் திறமையான மனிதவளம் மற்றும் தொழில்துறை நிபுணத்துவத்துடன் இத்திட்டம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதனால், குறித்த பயணிகள் படகுச் சேவையைப் பயன்படுத்த உத்தேசித்துள்ள மக்களின் குடிவரவு மற்றும் சுங்க அனுமதிக்கான பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கும் பணியை இலங்கைக் கடற்படை மேற்கொண்டுள்ளதாகவும், கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் இலங்கைத் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்படுவதாகவும் கடற்படை ஊடக அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது.

தற்போது, கடற்படைச் சிவில் பொறியியல் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், 60 கடற்படை வீரர்கள் கொண்ட குழு 1000 சதுர மீற்றர் பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பயணிகள் முனையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் முடிவடைந்து, அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்காக இந்தப் பகுதி இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir