பண்டிகைக் காலத்தில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பொலிஸாருக்கு மேலதிகமாக, புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு பல திருட்டுச் சம்பவங்கள் நடப்பதாகவும், புத்தாண்டுச் சந்தைக்குள் போலியான வர்த்தகர்கள் நுழைவதாகவும் பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பொருட்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. அது குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்துசெல்ல வேண்டாமெனவும் அத்துடன் பணப்பையைக் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
T02
