யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவினை நடத்துமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டமானது இன்று புதன்கிழமை ஆலய பக்தர்கள், சைவ மதகுருக்கள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து பக்தர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தனிப்பட்ட வேற்றுமை, தனிப்பட்ட காரணத்துக்காக ஒரு சிலர் இந்த ஆலயத்தின் திருவிழாவினை தடுக்கிறார்கள். இது தொடர்பான நீதிமன்ற வழக்கானது எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆனால் கொடியேற்றும் நிகழ்வு வரும் 18 ஆம் திகதி நடைபெற வேண்டும்.
ஆலயம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒற்றுமையாக செயல்பட வைக்கும் ஒரு புனிதமான இடம். ஆலயத் திருவிழாக்கள் மூலம் தான் சமூகத்தின் ஒற்றுமை மேலோங்கும்.
பல வரலாற்று அம்சங்களைக் கொண்ட இந்தக் கோவிலுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அத்துடன், இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பலர் வருகை தருவது வழமை. இந்த நிலையில் இந்தத் திருவிழாவினை நிறுத்துவதால் பலர் பாதிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்கள் கவலை தெரிவித்தனர்.
ஆலயத்தின் திருவிழா சரியான நாட்களில் ஒழுங்காக நடைபெறாவிட்டால் அது அந்தக் கோவிலைச் சார்ந்த அனைத்து பக்தர்களுக்கும் ஒரு தீங்காகவே அமையும். எனவே, இந்தத் திருவிழாவினை வழமை போல் முன்னெடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
T02
