ஒளிமயமான எதிர்காலத்திற்கு புதிய ஆரம்பம் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறியதைத் தொடர்ந்து வரும் சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு உதயமானது நாட்டிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில், ஏராளமான செழிப்பைப் பெறுவதற்கான விருப்பத்துடன், மக்கள் பாரம்பரியமாக புத்தாண்டு பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கப்பட்ட நல்ல நேரங்களில் கடைப்பிடிக்கிறார்கள்.

“கடந்த ஆண்டு, எங்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்த  பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புத்தாண்டுச் சடங்குகளில் நாங்கள் பெரும் சிரமத்துடன் பங்கேற்றோம். இந்த துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தில் நாங்கள் மட்டுப்படுத்தப்பட்டோம்.

“இருப்பினும், இந்த வருடத்தின் ஆரம்பம் நம் அனைவருக்கும் ஒரு நல்ல சூழலை வழங்கியிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே, நாம் இன்று இருப்பதை விட அதிக செழுமையாகவும் வளமாகவும் இருக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

“ஓர் இலங்கை தேசமாக, ஒற்றுமையாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் இந்த அபிலாசையை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி அடைய முடியும். அதன்படி, அரசியல் சார்பு, இனம் மற்றும் மத வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தப் புத்தாண்டில் நமக்கும் நமது தேசத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க ஒரு புதிய ஆரம்பம் கட்டாயமாகும்.

“இங்கும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”, என ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir