உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பணியாற்றுவோம்: பிரதமர்

சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டு இலங்கையர்களின் மிக முக்கியமான கலாசார விழாவாகும், என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“நாம் பல பழங்கால சடங்குகளை ஒரே புனிதமான நேரத்தில் தொடர்ந்து பின்பற்றுகிறோம். இது உலகில் வேறு எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லாத தனித்துவமான அம்சமாகும்” என்று பிரதமர் தனது புத்தாண்டுச் செய்தியில் கூறியுள்ளார்.

இலங்கையர்களாகிய நாங்கள் எப்பொழுதும் வளமான புத்தாண்டை வாழ்த்துகிறோம். இந்த ஆண்டு நாடு எதிர்கொண்டுள்ள உணவு மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் அபிலாசையை நிறைவேற்றி, நாட்டை நெல் வளம் மிக்கதாக மாற்ற நமது விவசாயிகள் எடுத்த முயற்சியை இந்தப் புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

“இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் புத்தாண்டிற்குப் புதிய அர்த்தம் சேர்த்துள்ளனர். அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளாகிய நாம் உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் பற்றி புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றை நடைமுறைப்படுத்துவதுதான் நமக்குத் தேவை.

“கடந்த சில வருடங்கள் நாம் சிந்திக்க நிறைய விடயங்களை அளித்துள்ளன. தொற்றுநோய்கள், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் ஆகியவை நமது சமீபத்திய வரலாற்றில் நாம் சந்தித்த மிகக் கடுமையான சவால்கள் ஆகும்.

“நாமும், எதிர்கால சந்ததியும் இதே போன்ற இன்னல்களை இனிவரும காலங்களில் சந்திக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, புதிய கருத்துக்களால் செழுமைப்படுத்தப்பட்ட புத்தாண்டைத் தொடங்குவோம்” என்று பிரதமர் தனது செய்தியில் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir