ஏப்ரல் மாதத்தின் முதல் 16 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 56,000 ஐத் தாண்டியது.
இந்த நிலையில், இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 4 லட்சத்தை ஐ நெருங்கியுள்ளது.
இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்ட தற்காலிகத் தரவுகளின் அடிப்படையில், இலங்கையானது ஏப்ரல் 1 முதல் 16 வரையான காலப்பகுதியில், 56,402 வருகையாளர்களை வரவேற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தினசரி வருகை சராசரியாக 3,500 ஆக இருந்தது எனவும், குளிர்காலம் முடிவடைந்ததால் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்த 4,000 அளவோடு ஒப்பிடும்போது இது குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 15 முதல் வருகை தருவோரின் எண்ணிக்கை 2,000 என்ற அளவில் இருப்பதால், மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வருகை தருவோரின் எண்ணிக்கை குறைந்த வேகத்தைக் காண்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 1 முதல் ஏப்ரல் 16 வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 392,018 ஆகக் காணப்படுகின்றது. இலங்கைக்கான மிகப்பெரிய சுற்றுலாப் பயணிகளைத் தரும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அண்டை நாடான இந்தியாவாகும். இதுவரை ஏப்ரல் மாதத்திற்கான மொத்த வருகையில் இந்தியா 17 சதவீத பங்களிப்பை இலங்கைச் சுற்றுலாத்துறைக்கு வழங்கியுள்ளது.
மொத்த வருகையில் 14 சதவீதத்தைக் கொண்டுள்ள ரஷ்யக் கூட்டமைப்பு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் மொத்த வருகையில் 9 சதவீதப் பங்களிப்பை அளித்துள்ளன. முன்னைய காலங்களை விடக் குறித்த எண்ணிக்கையானது சற்றுக் குறைவாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிற முக்கிய ஆதார தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பிரான்ஸ், ஒஸ்ரேலியா, அமெரிக்கா, கனடா, சீனா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் பங்களிப்புச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
T01
