குரங்குகள் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்: நவின்

சீனாவிற்குக் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க, குரங்குகள் ஆய்வகங்களுக்குள் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில், முன்னாள் வனவிலங்கு அமைச்சரான தான், குரங்குகளைச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முற்றிலும் எதிரானவன் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், இது ஓர் அருவருப்பான செயல் எனவும் அதைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் முன்னாள் அமைச்சர் டுவீட் செய்துள்ளார்.

இலங்கையின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களை அழிப்பது சட்டத்திற்கு எதிரானது என்பதனால்தான் இந்த நடவடிக்கைக்கு எதிராகச் செயற்படுவதாகவும், இலங்கையில் பாதுகாக்கப்படும் உள்ளூர் இனங்களை ஒருபோதும் பெருமளவில் ஏற்றுமதி செய்யக்கூடாது என்றும், நவின் கூறியிருக்கிறார்.

விலங்கியல் பூங்காக்களுக்கு இடையிலான பரிமாற்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அவை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும், அவை ஆய்வகங்களுக்குள் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்பதை நன்கு அறிந்தும் இவ்வாறு செயற்படுவது மனிதாபிமானமற்றது, எனவும் நவின் மேலும் கூறியுள்ளார்.

குரங்குகள் அழகான விலங்குகள் என்றும் அவர்களின் இயற்கையான வாழ்விடத்தில் சுற்றித் திரிந்து முழு வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை அவற்றுக்கு வழங்க வேண்டும் எனவும் நவின் மேலும் தெரிவித்திருக்கிறார்.

 

T01

You May Also Like

About the Author: kalaikkathir