காலி முகத்திடலைப் பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தைச் செலவிடுவதற்கும் விசேட சமய நிகழ்வுகளுக்காகவும் மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலில் அரசியல் சந்திப்புக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது, என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.
காலிமுகத்திடலானது மக்கள் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடும் இடமாக இருந்ததாக அமைச்சர் கலாநிதி குணவர்த்தன தெரிவித்தார். அண்மைய காலங்களில் அங்கு நடந்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் மோதல்களால், அந்த இடம் மிகவும் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கைத் துறைமுக அதிகாரசபையானது காலி முகத்திடலைச் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காகச் சுமார் 220 மில்லியன் ரூபாவை அதிகார சபை செலவிடவுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது அப்பகுதியில் ஏற்பட்ட சொத்துச் சேதங்களைச் சீரமைக்க மட்டும் 6.6 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர், காலி முகத்திடலை பொதுமக்களுக்கும் விசேட சமய நிகழ்வுகளுக்கும் மாத்திரம் அனுமதிப்பதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலி முகத்திடலின் அமைதியைக் கெடுக்கும் அல்லது அழகைக் கெடுக்கும் வகையிலான இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கோ அந்தப் பிரதேசத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கோ அல்லது வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கோ ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படமாட்டாதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
T02
