மேதினக் கூட்டங்களில் கலந்துகொள்ளவருவோர், மக்கள் பயணிக்கும் வீதிகளை மறிக்கும் வகையில் நிறுத்திவைக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாகனங்களை நடைபாதைகளிலும், வீதிகளைத் தடுக்கும் வகையிலும் நிறுத்த வேண்டாம் எனவும், சாலையை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு போக்குவரத்துப் பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாகன உரிமையாளர்கள் உரிய செலவுகளைச் செலுத்துவதோடு மட்டுமல்லாது சட்டத்திற்கு அமைய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் எஸ்.எஸ்.பி தல்துவா குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பேரணிக்குமென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தினால், பொதுமக்களுக்குப் பாதிப்பு வராது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்த்துப் பயணிப்பதன் மூலம் பொதுமக்கள் அசௌகரியங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவுறுத்தியுள்ளார்.
பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் மே தினப் பேரணிகள் நடைபெறும் கொழும்பு மற்றும் கண்டிப் பகுதிகளில் சுமார் 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
T01