மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியாவிற்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
சார்ள்ஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட மற்றைய உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
லண்டனில் தலைவர்கள் ஒன்றுகூடி பொதுநலவாய நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கான பொதுநலவாய உச்சி மாநாட்டை மே 5 வெள்ளிக்கிழமையன்று மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் முன்னிலையில் கொமன்வெல்த் செயலகம் நடாத்தியிருந்தது.
இக்கூட்டத்தின்போது, இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் கல்வி சீர்திருத்தங்களை ஆதரிப்பதில் பொதுநலவாய நாடுகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியிருந்தார். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் நாடுகளுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்தவும் கொமன்வெல்த் அமைப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, தலைவர்கள் கூட்டத்திற்கு இணையான நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Fireside Chat நிகழ்ச்சியில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
T02