யாழ் மாநகரசபைக்குட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்து றொட்டியில் இறைச்சி பழுதடைந்திருந்தமை தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைத்ததை அடுத்து கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பர்டு கிடைக்கப்பெற்ற பின்னர், யாழ் மாநகர சபைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்றைய தினம் குறித்த கடையில் திடீர்ப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, குளிர்சாதனப் பெட்டியில் சுகாதாரச் சீர்கேடான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய 45 கிலோ இறைச்சி கண்டறியப்பட்டதுடன் மேலும் பல குறைபாடுகளும் இனங்காணப்பட்டன.
இதனையடுத்து, குறித்த கடை மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதவான் கடையினை மறு அறிவித்தல் வரை மூடிச் சீல்வைக்குமாறும் கைப்பற்றப்பட்ட 45 கிலோ இறைச்சியினை அழிக்குமாறும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு உத்தரவிட்டார்.
வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..