யாழ் நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களுக்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி அவர்களிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து இன்றையதினம் வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ்நகர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குழுவினால் குறித்த கடை திடீர்ச் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் இருந்தமை கண்டறியப்பட்டது. அத்தோடு, மனிதப் பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20 கிலோ அளவிலான உணவுப் பொருட்களும் பழுதடைந்த பழங்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினமே யாழ்நகர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவக உரிமையாளருக்குகு எதிராகச் சான்றுப் பொருட்களுடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான், சான்றுப் பொருட்களைப் பதிவுசெய்துகொண்டு அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
