அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்து இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை(26) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதுளை தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அவுஸ்திரரேலியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து 18 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் பிரகாரம் செயற்பட்ட விசாரணை அதிகாரிகள், பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் தொழிலுக்காக ஆட்களை இணைத்துக்கொள்ளும் குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபரகள் இருவரும் தற்போது பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட இருக்கின்றனர்.