பிரான்சில் விதிமீறல்களில் ஈடுபடும் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடக பிரபலங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரான்சில் 150,000க்கும் அதிகமான சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளதாக அந்நாட்டு பொருளாதார, நிதி மற்றும் டிஜிட்டல் இறையாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, போலியாக அல்லது தவறாக வழிநடத்தும் செய்திகள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லொட்டரி, சூதாட்டம், புகையிலை விளம்பரம் போன்றவற்றை ஊக்குவிப்பதையும் புதிய விதிகள் கட்டுப்படுத்துகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, சமூக ஊடக பிரபலங்கள், தங்கள் தளத்தை சிறுவர்கள் பார்க்க முடியாது என உறுதிப்படுத்தியிருந்தால் மட்டுமே, லொட்டரி, சூதாட்டம், புகையிலை போன்றவற்றிற்கு விளம்பரம் செய்யமுடியும் அவ்வாறு உறுதிப்படுத்தப்படாவிட்டால் விளம்பரம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அழகியல் அறுவை சிகிச்சைகள், சில நிதி தயாரிப்புகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றிற்கும் விளம்பரம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறான விதிகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 300,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.