இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நேற்றிரவு 7 மணியளவில் நடைபெற்ற பயங்கர ரயில் விபத்தில் 288 பேர்வரை பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலானது, ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரெயில் நிலையத்துக்கு அருகே பயணித்த வேளையில், அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலின் தண்டவாளத்தில் தவறுதலாக சென்றுள்ளது.
ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து தவறுதலாக மாற்றுத் தண்டவாளத்தில் அந்த ரெயில் சென்றபோது,
அந்தத் தண்டவாளத்தில் ஏற்கனவே தரித்து நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயிலுடன் மணிக்கு 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்று மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன.
அப்போது அந்தத் தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்தக் கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளுன் தடம் புரண்டுள்ளன.
இந்தக் கோர விபத்தில் மொத்தம் 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன
சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு அல்லது மனிதத் தவறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்றுத் தண்டவாளத்தில் சென்று சரக்கு ரெயில் மீது மோதி இந்தப் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து இந்திய ரெயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ரயில் விபத்து தொடர்பில் அனுதாபம் வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபவும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாவும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.