தமிழர்களுக்கு நீதி வழங்காவிடின் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது! சிறிதரன் சீற்றம்

30 ஆண்டுகளாக யுத்த சூழலில் வாழ்ந்த தமிழர்களுக்கு நீதியை வழங்காவிடின் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது, கர்மவிணை தொடரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (06) இடம்பெற்ற துறைமுகங்கள்,கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் பொதுமக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு,கொலை முயற்சிக்கு உள்ளாகியுள்ளார்.பொது மக்களின் முயற்சியால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரை விசாரிக்காமல்,கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது விசாரணைகள் திரும்பியுள்ளன.

தமிழ் தேசிய முன்னணியின் வடமராட்சி மகளிர் அணி தலைவி ஜெகதீஸ்வரன் சற்குண தேவி நேற்று முன்தினம் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,இன்று வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் உதய சிவம் வற்றாப்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மருதங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பயணத் தடை விதித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அரச புலனாய்வு பிரிவினரால் கொலை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படும் போது அது குறித்து விசாரணை செய்யாமல் பாதிக்கப்பட்ட தரப்பினர் கைது செய்யப்படுவது இந்த நாட்டில் எவ்வகையான சட்டம்,ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

இவ்வாறான தன்மையே கடந்த காலங்களிலும் இந்த மண்ணில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. எமக்கு எதிரான துப்பாக்கி முனை திரும்பும் சம்பவங்களே காலம் காலமாக பதிவாகுகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நேர்ந்த கதி நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும்.

தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்த நாட்டில் இயல்பானதே “, எனவும் தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply