காலிமுகத்திடலுக்குள் அமைந்துள்ள உணவகத்தில் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கலால் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஜூன் 5 ஆம் திகதி, குறித்த குழுவினர், வணிக வளாகத்தினுள் உள்ள உணவகம் ஒன்றில் மோதலில் ஈடுபட்டு, உணவகத்தின் பிரதான சமையல்காரரை கொடூரமாக தாக்கியிருந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த உணவக சமையல்காரரும், கலால் துறையின் அதிகாரி ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கலால் ஆணையாளரும் திணைக்களத்தின் பேச்சாளருமான கபில குமாரசிங்க,
இந்த விவகாரம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு, தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
15 பேர் கொண்ட இக்குழு, கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், சம்பவத்தின் போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் குமாரசிங்க மேலும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
T02