கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தது.
இதன் போதே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேற்கொண்ட போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர் கல்வீச்சுத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தை நோக்கி செல்லும் நுகேகொட – விஜேராம வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள எதிர்ப்பு பேரணி கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தின் போது, கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த – பாலி பல்கலைக்கழகம் திறக்கப்பட வேண்டும், மகாபொல உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும், உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.