வெளிநாட்டுப் பிரிவினைவாதக் குழுக்களின் கைக்கூலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகின்றார் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார் அவர்.
“வெளிநாட்டுப் பிரிவினைவாதக் குழுக்களின் கைக்கூலியாகச் செயற்படும் ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். அவர்தான் இராசமாணிக்கம் சாணக்கியன். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு விருப்பம் அற்றவர்தான் அவர். இனப்பிரச்சினை நீடித்தால்தான் தம்மால் அரசியல் செய்ய முடியும் என அவர் கருதுகின்றார். அதனால்தான் தீர்வைக் காணும் எமது முயற்சிக்கு அவரால் எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.
நாம் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண முற்பட்டால் அதனைக் குழப்புமாறு வெளிநாட்டுப் பிரிவினைவாதச் சக்திகள் அவருக்கு ஆலோசனை வழங்குக்கின்றன. அந்த ஆலோசனையின் பிரகாரம்தான் அவர் கொக்கரிக்கின்றார். நேற்றும் இந்தச் சபையில் அவர் கொக்கரித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நான் அரச வீடொன்றை வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார். அது பொய். அவ்வாறு எனக்கு வீடு வழங்க முடியாது. நான் அரச வீட்டில் வசிப்பதும் இல்லை. சொந்த வீட்டில்தான் வாழ்கின்றேன். எனவே, சிறப்புரிமையைப் பயன்படுத்திக்கொண்டு சில்லறைத்தனமான கருத்துக்களை வெளியிட முற்படக்கூடாது.” என்று அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.