ரஷ்யாவுக்கு எதிரான போரில் போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகளின் படை உக்ரைனில் தரையிறங்கலாம், என நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றிட முடியவில்லை என்றால், போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகள் உக்ரைனில் துருப்புகளைத் தரையிறக்கத் தயாராக இருக்கலாம், என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உளவுத்துறைத் தகவல் பகிர்வு, இராணுவப் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்குதல் ஆகியவற்றில் நேட்டோ நாடுகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவாதங்களை உக்ரைன் கண்டிப்பாகப் பெறவேண்டும், என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நேட்டோ நாடுகளுக்கு இடையே உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை வலுப்படுத்த போலந்து தயாராக இருக்கும் என்றும், இந்த உதவியைப் பெற உக்ரைனுக்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டர்ஸ் ராஸ்முஸன் 2009-2014 காலகட்டத்தில் நேட்டோவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.