கா.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதிய கைதி மலசலக்கூடத்திலிருந்து தப்பியோட்டம்

மனித படுகொலை மற்றும் கைக்குண்டை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

பரீட்சையில் விடையளித்துக்கொண்டிருந்த அந்தக் கைதி, சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, தொடங்கஹவத்த பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்ட நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக குறித்த மாணவன் மாகொல ஆண்கள் தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சாதாரணத்தர பரீட்சையின் இறுதி நாளான கடந்த 8 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் பரீட்சை மண்டபத்துக்குள் அவர் அழைத்து வரப்பட்டார்.

பரீட்சைக்குத் தோற்றியிருந்த அவர், பரீட்சையின் இடைநடுவில் மலசலக்கூடத்துக்குச் செல்லவேண்டுமென, பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அவருடைய அனுமதியுடன், சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும், அருகிலுள்ள மலசலக்கூடத்துக்கு கைதியை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அதிகாரிகள் இருவரையும் இடித்துத் தள்ளிவிட்டு குறித்த மாணவன் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, தப்பியோடிய மாணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply