களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்திசாலை நலன்புரிச் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியாசலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரப்பட்டது.

நலன்புரிச் சங்கத்தினரும், நோயாளிகளும், சமூக நல விரும்பிகளும் பங்கெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் “எமது வைத்தியர்களைக் காப்பாற்றுவோம் வைத்தியர்களுக்கான தட்டுப்பாட்டால் நோயாளருக்கான சிகிச்சை தாமதம், வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரசியலைத் திணிக்காதே,” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தம் வசம் ஏந்தியிருந்தனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினர், “மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள சுமார் ஒரு இலட்சம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய இந்த வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.

2012ஆம் ஆண்டிலிருந்தே இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டிருந்தாலும் இங்கு ஆளணிப்பற்றாக்குறை நிலவி வருகின்றது. 51 வைத்தியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 11 வைத்தியர்கள் மாத்திரம் கடமை புரிகின்றார்கள்.

2 விஷேட வைத்தியர்கள் மாத்திரமே உள்ளார்கள், இங்கு கடமைக்காக வரும் வைத்தியர்கள் குறுகிய காலத்தில் இடமாற்றம் பெற்றுச் செல்வது இங்குள்ள நோயாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தைத் தந்து வருகின்றது.

இங்கு சிகிச்சையை எதிர்பார்த்து வரும் மக்கள் இங்கு நிலவும் வைத்திய ஆளணிப் பற்றாக்குறை காரணமாக மட்டக்களப்பு, கல்முனை போன்ற தூர இடங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இக்குறைபாடு உடனடியாக நிவர்த்திக்கப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” எனத் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir