உணவே மருந்து – தமிழர் பொருண்மியம் கட்டுரை

உணவே மருந்து
– தமிழ்க்கவி

காலையில் எழுந்து முகம் கழுவாமல் தண்ணீரும் குடிப்பதில்லை. அப்படியே மறந்து அடுக்களையுள் போனாலும், வாயில் கடைவாய் வழிந்த கோடு காட்டிக்கொடுத்துவிடும். பல் விளக்கியே ஆகவேண்டும்.

பல்விளக்க நாங்கள் இப்போது தெரிவு செய்வது புதிய புதிய பற்பசைகளைத்தான். அதற்கு முன் பற்பொடியும் வந்தது. எங்கள் காலத்தில், நாங்கள் அடுப்புக்கரி, மணல், உப்பு, செங்கல்லுத் தூள், என எடுத்துக் கொள்வோம்.

கொஞ்சம் படித்த யாழ்ப்பாணத்து அம்மானும் மகனும் வந்தால் வேப்பங்குச்சி, ஆலம்விழுது எனத் தேடி வாயில் போட்டு சப்பி தும்பாக்கி அதில் பல்விளக்குவார்கள். என் பெரியப்பா வந்தால் நாயுருவிச் செடியின் வேரில்தான் பல்விளக்குவார். நாங்கள் பல்விளக்க எடுத்துக் கொள்ளும் பொருட்களெல்லாம் தப்பானவை என்பார். என் அம்மா எங்களுக்கு முரசு கரைகிறது என்று கடுக்காயை சுட்டு கரியாக்கி பொடிசெய்து அதில் பல் விளக்கத்தருவார். ஓட்டு மொத்தத்தில் எது சரி எது பிழை என்பதில் நாங்கள் பெரியப்பாவை பின்பற்ற முடிவு செய்தோம். அவர் மட்டும்தான் ‘வாகடம்’ படித்தவர் என அறிமுகமானவர். ‘வாகடம்’ என்றால், வைத்திய நூல்கள் சோதிட ந}ல்கள் போன்ற நெறி முறைகளை கூறும் நூல்வகைகள்.

“கல்லும் மணலும் கரியுடன் பாளைகளும்
வல்லதொரு வைக்கோலும் வைத்து நிதம்- பல்லதனை
தேய்ப்பாரேயாமாகில் சேராளே சீதேவி
வாய்த்திடுவாள் மூதேவி வந்து.”

இது எங்கேயோ வாகடமாக வந்த சித்தர் பாடல். அதைச் சொல்லி எங்களை மடக்குவார். பின்ன, அந்த நாளையில் சீதேவியையும் மூதேவியையும் காட்டி பயப்பிடுத்தித்தான் எங்களையும் எங்கள் வீட்டு நடவடிக்கைகளையும் ஒழுங்கு படுத்தி வைப்பார்கள்.( எங்க இப்ப உள்ள பிள்ளையளுக்கு சொல்லட்டன் பாப்பம்) ஆனாலும் நான் ஒரு ரெண்டுங் கெட்டான். அந்தக்காலமானாலும் ‘ஏன்’? என்று கேட்;கிற வர்க்கம். பெரியப்பரை அதுக்காக எதிர்த்தெல்லாம் பேச முடியாது. என்றாலும் அவருக்கு சிலபல பணிவிடையளைச் செய்து ‘ஏன் பெரியப்பு’என்று கேட்டேவிட்டேன்.

“பிள்ளை பல்லில வியாதி வந்தா முகம் கோணிப்போகும். ஒரு வேலையும் செய்ய ஏலாது. அப்பிடியே பல்லில்லாமப் போன முகத்தின்ர அழகு போயிரும். ஒரு சிரிப்பின்ர அழகுதான் மற்றவைய கவரும். ஓருத்தன் நம்பி ஒரு வேலையத்தந்தாலும், சிடுமூஞ்சிக்கு கொடுப்பானோ. வேலையும் இல்ல. நோயும் இருந்தா தரித்திரம்தானே. அதுதான் சீதேவி சேரமாட்டாள். எண்டு சொல்லுறது.”
“அப்ப இதுக்கு என்னதான் வழி”

“வேலுக்கு பல்லிறுகும் வேம்புக்கு பல்லுறுதி
பூலுக்கு போகம் பொழியுங் காண்.- ஆலுக்கு
தண்டாமரையாளும் சேர்வாளே நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்.”

வேலமரம் வேப்பமரம், பூலாங்கொடி ஆலம்விழுது, நாயுருவி இவைதான் பல்லுக்கான மூலிகைகள்.

தலைக்கு பரவலாக சாம்பூ வந்தது, அறுபதுகளில்தான். அப்போது அது ஒரு வேளைக் குளிப்புக்கு அளவாக சின்ன பைகளில் இரண்டு ருபாவுக்கு விற்பனையானது. அந்த இரண்டு ரூபாவுக்கு ஒரு கொத்தரிசியும் இரண்;டு றாத்தல் சீனியும் வாங்கலாம். ஆகையால் சாதாரண மக்களுக்கு சரிவராது. கொஞ்சம் வசதியானவர்கள் தலைக்கு தேய்த்து முழுக அரப்பெண்ணை சீயக்காய் என வாங்கி பதம்பண்ணி குளிப்பர்கள். அதுவும் கூட கிடைக்காத மக்கள், குளம் வற்றும் காலங்களில் அதன் அடிப் பொருக்குகளை சேர்த்து வைப்பார்கள். ஒருகை களிமண்ணை ஊறவைத்து பிசுபிசுப்பாக்கி தலைக்கு தேய்த்துக் குளித்தால், முன்னம் சொன்ன பணத்தில் வாங்கும் பொருட்களை விட அருமையாக அழுக்கைநீக்கி சுகத்தை கொடுக்கும்.

தற்கால மண்குளியல்களின் முன்னோடி நாங்கள்தான். அடுத்தது செம்பருத்தி இலைகளை கசக்கி அந்த வழுவழுத்த நீரை தலைக்கும் தேகத்துக்கும் பூசிக் குளித்தால் தலையில் பொடுகு நீங்கும். உடலில் சரும நோய்கள் வராது. தேகம் உஷ்ணம் அடைந்து வயிற்றுக்கடுப்பு நீர்க்கடுப்பு போன்றவை வருங் காலத்தில் ஆவாரை இலைகளை உரலில் இடித்து தலைக்குத்தப்பி சில நிமிடங்கள் கழித்து குளித்தால்… உடல் வெப்பம் தணியும். அழகான நீண்ட தலைமுடியும் வனப்பான திடகாத்திரமான தேகமும், கொண்ட பெண்கள் வலிமையான வேலைகளையும் செய்தார்கள். இவர்கள் இந்த வேலைகளுடனேயே வருடாந்தம் பிரசவித்த பெண்களும் அதிகம்.

உடலுக்கு நலமானது. என்று தெரியாமலே நாங்கள் உண்ணுவ தெல்லாம் மூலிகைகள்தான். அந்த அந்தக்காலங்களில் காடுகளில் முளைத்தவைகள் பெருமளவு உணவாகியது. அல்லைக்கிழங்கு கொடியோடிப் பூக்கள் வரும். கதிர்கள்போல, அழகிய பச்சைப்பூக்கள். அவற்றை சிறு பெட்டி கொண்டு போய் உருவி, கொண்டு வந்து சுண்டல் செய்வோம். அருமையான சுவை அதன் கிழங்கு மிக ஆழமாக நிலத்தில் போயிருக்கும்.

அல்லைக்கிழங்கை மண்டி போட்டிருந்து கிண்டியெடுத்து அவித்துத் தின்போம். பிரண்டைக்குருத்தைக்கிள்ளி வந்து நாரெடுத்து அதை அவித்து ஒரு துவையல் செய்வோம். தாளித்து எடுத்தால் அருமை. மணத்தக்காளி சொடக்குத்தக்காளி இரண்டும் வயிற்றுப்புண்ணுக்கு அருமையான மருந்து. அவை எங்கள் தினசரி உணவு. அதாவது போகவர பிடுங்கித் தின்பதுதான். அதுமட்டுமல்ல. கீரை வகைகளில் கானாந்தி, சாத்தாவாரி, பிரண்டை, கறிவேப்பிலை. கானக்கொச்சி, என்பன பணமில்லாமல் கிடைத்த வளங்கள். சலரோகத்துக்கு மூக்கறைச்சி, துத்தி, நன்னாரி என்பவை அருமருந்து என்று இப்போது சொல்கிறார்கள் அவையெல்லாம் எமது அன்றாட உணவில் அடக்கமாக இருந்தது.

குன்றிமணி கொடியின் இலைகளை சப்பிவிட்டு தண்ணீர் குடித்தால் சர்க்கரை போல இனிக்கும். அதற்காகவே அதைக்கண்டால் உருவித்தின்போம். அது தொண்டை கட்டுக்கு சிறப்பான நிவாரணி என்பது இப்போதுதான் தெரியும். சிறுதும்பைப்பூவில் இடியப்பம் செய்து விளையாடுவோம். அதை அப்படியே வாயில் விளையாட்டாக போட்டுத்தின்போம் இப்போது அது எத்தகைய விஷத்தையும் முறிக்கும் என அறிகிறோம். பொன்னாங்காணி, ஆரை, கங்குன், இவையெல்லாம் எமது கறித்தட்டுப்பாட்டை நீக்கியவைதான். குருவித்தலைப்பாகற்காய் வட்டுக்காய் சுண்டங்காய், என்பன சாதாரணமாக கிடைக்கும். பாகற்காய் அளவேயான தும்பங்காய் அருமையாகத்தான் கிடைக்கும். என்ன சுவையான கறிவகைகள். அவற்றில் கிருமி நாசினிகளோ இரசாயன உரங்களோ செறியவில்லை. குளத்தின் நீரில் மீன் மட்டுமல்ல, ஒலுத்தண்டு கறியும், அது வற்றிய போது தாமரைக்கிழங்கும் கரைக்குளத்தில் கொட்டிக்கிழங்கும் கிடைக்கும். இவைபற்றிய சங்கப்பாடல்களும் இருக்கிறது.

பழங்களாக கூழா விளா புளி நறுவிலி, நாவல், பாலை வீரை பன்னை உலுவிந்தை இவைபற்றி முன்னரே தேனாகத் தந்துவிட்டேன். நூங்கள் விளைவிக்கும் காய்கறிகளிலும் இயற்கையாக விளைந்தவை அதிகம் மீறி செடிகளில் ஏதாவது நோய் தென்பட்டால் அவற்றை வெட்டி தொலைவில் போட்டு அழித்து விடுவதே வழக்கம்.

இப்போதெல்லாம் பயிர்களில் நோய் கண்டால் அதற்கு காரணிகளை கண்டு அவற்றை கிருமிநாசினிகளை பாவித்து அழிக்கிறோம். நோய் தீருவதில்லை. கட்டுப்பாட்டுக்குள் நிற்கும். செடியை விரைவாக வளர்க்க இரசாயன உரங்களை பாவிக்கிறோம். அது நிலத்தில் கேட்டை விளைவிக்கிறது.

காலப் போக்கில் எமது விவசாய உற்பத்திகள் பெரும் செலவை கொண்டதாக மாறி வருகிறது. எனவே அதிகமான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். அது இயலாத பட்சத்தில் வெளிநாடுகளுக்கு பயணிக்கிறார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாம் அறியாமலே நச்சு உணவுகளுக்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவே நாகரீகம் எனக்கருதி உள்நாட்டிலும் அந்த இத்தாலிய சீன யப்பானிய உணவு வகைகளை உற்பத்தி செய்கிறார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்கள் தமிழ் கடைகளை நாடினாலும், அங்கும் இந்த செயற்கை உணவுகளே அதிகமாக வழங்கப்படுகிறது. நாங்கள் மனது வைத்தால் நோயற்ற வாழ்வு நம்கையில் உண்டு.

You May Also Like

About the Author: digital

Leave a Reply