சென்னை விமான நிலையத்தில் ஆரம்பமாகிறது புதிய முனையம்!

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் ஜூலை மாதம் முதல் முழுமையாக இயங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முனையம் சோதனை முறையில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் செயற்படத் தொடங்கியது.

அன்றைய தினம் சோதனை நடவடிக்கையாக பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை – டாக்கா இடையே ‘யுஎஸ் பங்ளா’ என்ற பயணிகள் விமானம் தனது சேவையை ஆரம்பித்திருந்தது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில், 1.36 லட்சம் சதுர கிலோ மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

குறித்த முனைய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திறந்து வைத்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, ஜூன் மாதம் முழுவதும் சோதனை முறையில் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இருந்து புதிய விமான முனையம் முழுமையாக செயற்படத் தொடங்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடர்ந்தும் சிறிய வகை விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த வாரத்தில் இருந்து நடுத்தர விமானங்கள் சோதனை முறையில் இயக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர்.

ஆகவே, புதிய முனையம் சீராக இயங்க ஆரம்பிக்கும் போது பயணிகள் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply