தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும்

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:-

“வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த  தேர்தலை விடவும்  20 ஆசனங்களைப் பெறும்.

தமிழ் பேசும் மக்கள்  வாக்குகளைப் பிரிக்காமல் ஒரு குடையின் கீழ் தங்களது வாக்குகளை அளித்து சர்வதேசத்துக்கு ஒரு நல்ல செய்தியை எடுத்துக்காட்ட வேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்கான சரியான ஓர் அரசியல் தீர்வைப் பெற வேண்டிய சந்தர்ப்பத்தில் நாங்கள் இருக்கின்றோம். இதையெல்லாம் எல்லாத் தலைவர்களும் அதாவது மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சஜித் பிரேமதாஸ, மைத்திரிபால சிறிசேன ஆகிய தலைவர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே, இம்முறை எந்த அரசு வந்தாலும் சேர்ந்து செயற்படத் தயார். கடந்த காலங்களில் நான் ஏற்கனவே கூறிய அரசியல் தலைவர்கள் உறுதிமொழி தந்துள்ளார்கள்.

புதிய சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என அனைத்தும் பதிவில் உள்ளன. சர்வதேச நாடுகளிடம் இது பதிவில் உள்ளது. ஆகையால் எந்த அரசு வந்தாலும் நமக்கு சரியான தீர்வைத் தரவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir