சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 15 பில்லியன் ரூபா பெறுமதியான 200 மில்லியன் சிகரெட்டுகள் இன்று அழிக்கப்படுள்ளன.
2021ஆம் ஆண்டு இந்த சிகரெட் தொகை 21 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
இது இலங்கை வரலாற்றில் இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை புகையிலை கூட்டுத்தாபனத்தால் கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய சட்டவிரோத சிகரெட் தொகையென கருதப்படுகிறது.
உள்ளூர் ஏற்றுமதியாளர் ஒருவர் துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரின் ஊடாக சட்டவிரோதமாக இந்த சிகரெட்டுக்களை இறக்குமதி செய்துள்ளார்.
இந்நிலையில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் நோனிஸ் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று காலை முத்துராஜவெலவில் அமைந்துள்ள கழிவு சக்தி அனல் மின் நிலையத்தில் இந்த சிகரெட்டுகள் அழிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, குறித்த நடவடிக்கையால் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டமைக்கு சுங்கத் திணைக்களத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.
இவற்றை யாரும் விற்க முடியாதா? என கேள்வி எழுப்பலாம். இவற்றை விற்க முடியாது. இவற்றின் தரத்திற்கு எந்தப் பொறுப்பும் கூறமுடியாது. சிகரெட் முற்றிலும் நிறம் மாறிவிட்டன.
இதனால் குறித்த சிகரெட் தொகையை இன்று அழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டோம் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.