கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு (SOC) தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உரிமம் வழங்க முன்வந்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, நாடு முழுவதிலும் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் தரம் மற்றும் ஆசிரியர்களின் தகுதி மற்றும் தரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதன்படி, தனியார் ஆசிரியர்களை ஒழுங்குபடுத்துவதும், அவர்களின் தொழிலுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதும் சிறந்தது என்று கல்வி அமைச்சக அதிகாரிகளுக்கு கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு பரிந்துரைத்தது.
தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு ஏனைய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அந்தத் தொழிலுக்கு தொழில்சார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இலங்கையிலும் அவ்வாறானதொரு முறையைப் பின்பற்றுமாறு குழு மேலும் பரிந்துரைத்தது.
எனவே, இவ்வாறானதொரு முறையைத் தயாரிப்பதில் உடனடி கவனம் செலுத்தி, தனியார் கல்வி ஆசிரியர்களை ஒழுங்குபடுத்துவதற்கும் சட்டரீதியாக அவர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம் வழங்குவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டதோடு, தற்போதுள்ள சட்ட கட்டமைப்பு, சர்வதேச பாடசாலைகள் வழங்கும் கல்வி மற்றும் அதன் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் அரச பாடசாலைகளில் காணப்படும் ஆங்கில மொழி மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் அதிக கவனம் செலுத்தினர்.